மனம் கொத்திப் பறவை

மனம் கொத்திப் பறவை

*நவீன இலக்கியம், சினிமா, பண்பாடு, கலாசாரம் பற்றிய தனது கருத்துகளை அப்பட்டமாக விமரிசித்து எழுதி வருபவர் எழுத்தாளர் சாரு நிவேதிதா. தான் பார்த்த விஷயங்களை, வெளிநாட்டுச் சம்பவங்களை, திரைப்படத் தாக்கங்களை, எதார்த்த நிகழ்வுகளை தன் அனுபவங்களோடு கலந்து எழுதுவதில் வல்லவர். அந்த வகையில், ‘மனம் கொத்திப் பறவை’ எனும் தலைப்பில் ஆனந்த விகடன் இதழ்களில் அழகாகவும், மிகுந்த ரசனையோடும் எழுதி, வாசகர்களின் மனதில் புகுந்து நிரந்தரமாக வாசம் செய்து கொண்டு இருப்பவர் சாரு.

ஆழ்குழாய்க் கிணறு தோண்டும் சமயங்களில், அந்தத் துளைகளில் விழுந்து குழந்தைகள் சிக்கிக்கொள்வதும், பிறகு அந்தக் குழந்தையைக் காப்பாற்ற ராணுவம் சுரங்கப்பாதை அமைத்துப் போராடி, பலசமயங்களில் இறந்த குழந்தையை மீட்பதும், அதை சேட்டிலைட் சேனல்கள் நேரடி ஒளிபரப்பு செய்வதும் அடிக்கடி நடக்கும் துயரம்! இப்படி, துளைபோடும் தொழிலாளர்களும், அவர்களை மேற்பார்வை செய்யும் அதிகாரிகளும் பொறுப்பில்லாமல் நடந்துகொள்வதால்தான் இந்த விபத்து ஏற்படுகிறது என்பதைச் சொல்லி, அவர்களை தேசத் துரோகிகளாகப் பார்த்து, சமூக அக்கறையோடு விளாசி இருக்கிறார்.

ஒரு காலத்தில் உலகம் முழுவதும் பரவி இருந்த, இயேசு பேசிய மொழி _ செம்மொழிகளில் ஒன்றான அராமிக். ஆனால், அந்த மொழி இன்று உலகில் சில ஆயிரம் பேரால் மட்டுமே பேசப்படுகிறது. அராமிக் மொழி வீழ்ச்சியடையக் காரணம், அந்த மொழியைப் பேசுபவர்களுக்கு என்று ஒரு தேசம் கிடையாது என்பதுதான்! இப்படி, தன் மனதைத் தைத்த நிகழ்வுகளை, சுவாரஸ்யமாக இந்த நூலில் படைத்திருக்கிறார். தொடராக வரும்போதே நல்ல வரவேற்பைப் பெற்ற ‘மனம் கொத்திப் பறவை’ இப்போது புத்தக வடிவில் சிறகு விரித்துப் பறந்து வந்து உங்கள் மனதையும் கொத்திப் போகும் என்பது உறுதி. வாழ்த்துகள்!

அஞ்சுமன் அறிவகம்

Share the Post

About the Author

Comments

Comments are closed.