நபிமார்கள் வரலாறு (ஆறு பாகங்கள்)
நபிமார்கள் வரலாறு (மூல புத்தகம்)
நூல் பெயர் : நபிமார்கள் வரலாறு (ஆறு பாகங்கள்)
மூல நூல் பெயர் : அல்பிதாயா வந்நிஹாயா
ஆசிரியர் : அரபி மூலம் அபுல் ஃபிதா இஸ்மாயீல் பின் கஸீர் அத்திமஷ்கீ (ரஹ்) (கி.பி.1300/1372)
தமிழாக்கம் : மெளலவி நூ.அப்துல் ஹாதி பாகவி M.A., M.Phil.
வெளியீடு : ஆயிஷா பதிப்பகம்
நூல் பிரிவு : AHR 4777
இந்நூலுக்கு P.S.செய்யது மஸ்வூது ஜமாலி M.A., Ph.D. (முதல்வர், கீழக்கரை புகாரி ஆலிம் அரபிக் கல்லூரி, வண்டலூர், சென்னை) அவர்கள் எழுதிய மேலாய்வுரையிலிருந்து சில தகவல்கள்,
மூல நூல் அறிமுகம் :
இந்நூல் சாதாரண வாசகர் முதல் ஆய்வாளர் வரை அனைத்துத் தமிழ் வாசகர்களுக்கும் பயன்படக்கூடியாக விளங்குகிறது. இதில் வரலாற்று தகவல்கள் வெறும் கதைகளாக கூறப்படாமல் தரம் பிரிக்கப்பட்டு வகைப்படுத்தப்பட்டுள்ளன. இது ‘அல்பிதாயா வந்நிஹாயா’ எனும் தலைசிறந்த அரபி வரலாற்று நூலின் தமிழாக்கம்.
இமாம் இப்னு கஸீர் (ரஹ்) தம்முடைய அரும்பெரும் வரலாற்றுத் தொகுப்புக்கு ‘அல்பிதாயா வந்நிஹாயா’ ஆரம்பமும் முடிவும் எனப் பெயரிட்டுள்ளார். இந்நூலிலுள்ள செய்திகளை மூன்று தொகுப்புகளாக எடுத்துக் கொள்ளலாம். முதல் தொகுப்பில் ஆதி மனிதர் ஆதம் (அலை) அவர்களிலிருந்து நபிமார்களின் வரலாறு தொடங்குகிறது. இரண்டாம் தொகுப்பில் இறுதித் தூதர் முஹ்ம்மது நபி (ஸல்) அவர்கள் முதல் நூலாசிரியர் வாழ்ந்த ஹிஜ்ரி 8 ஆம் நூற்றாண்டு வரையிலான இஸ்லாமிய வரலாறு விவரிக்கப்பட்டுள்ளது.
மூன்றாம் தொகுதியில் தனிப் பிரிவாக உலகம் அழியும் காலத்தில் நிகழவிருக்கும் அறிகுறிகள் விவாதிக்கப்பட்டுள்ளன. இதனால்தான் இந்நூலுக்கு ஆரம்பமும் முடிவும் என நூலாசிரியர் பெயரிட்டுள்ளாரோ என்று கருதத் தோன்றுகிறது.
புராதன வரலாறு என்றாலே கட்டுக்கதைகளும் மூட நம்பிக்கைகளும் நிறைந்த கற்பனைக் காவியமாகத்தான் இருக்கும் என்பது பொதுவான கருத்து. அதற்கு மாறாக, இஸ்லாமிய அறிஞர்களாலும் மேற்கத்திய அறிஞர்களாலும் போற்றத்தக்க சிறந்த வரலாற்று ஆய்வு நூலாகத் திகழ்கிறது ‘அல்பிதாயா வந்நிஹாயா’.
ஒரு தலைப்பின் கீழ் பல்வேறு வரலாற்று ஆசிரியர்கள் மாறுபட்ட பல கருத்துக்களைக் கூறியிருக்கலாம். அது போலவே ஒரு கருத்தைப் பல்வேறு அறிஞர்களும் கூறியிருக்கலாம். அவற்றைத் திரும்பத் திரும்பக் கூறவதைத் தவிர்க்காமல், அனைத்தையும் ஒன்று திரட்டி அலசி ஆராய்ந்து எது சரி, எது தவறு என்பதைக் காரண காரியங்களுடன் விவாதிக்கும் அரிய அணுகுமுறையை நூலாசிரியர் இமாம் இப்னு கஸீர் இந்நூலில் கையாண்டுள்ளார்.
உதாரணமாக, நூஹ் (அலை) அவர்களின் காலத்தில் ஊஜ் பின் உனுக் எனும் தீயவன் நபி மூசா (அலை) அவர்களின் காலம் வரை வாழ்ந்தான் என்ற குறிப்பைத் திருக்குர்ஆன் விரிவுரையாளர்கள் பலரும், வரலாற்று ஆசிரியர்களும் குறிப்பிடுகிறார்கள். ஆனால் இது பொய்யான கட்டுக்கதை என்று அறிவுப்பூர்வமான திருக்குர்ஆன் மற்றும் நபிமொழிகள் அடிப்படையிலும் இப்னு கஸீர் (ரஹ்) நிரூபித்துள்ளார். ஆகவே, இதை வரலாற்று நூல் என்பதைவிட வரலாற்று ஆய்வு நூல் என்பது சாலப் பொருத்தமாகும்.
வரலாற்று ஆசிரியர் இமாம் இப்னு கஸீர் (ரஹ்) திருக்குர்ஆனுக்கு மிகச் சிறந்த விரிவுரை எழுதியவர்; நபிமொழிக் கலையில் வல்லுநர்; இஸ்லாமிய மார்க்கச் சட்டம் என்னும் பிக்ஹ் கலையில் நல்ல புலைம பெற்றிருந்ததால் நீதிபதியாகப் பணியாற்றியவர். இவ்வாறு பல்துறைப் புலமை பெற்றிருந்ததால் அவரத வரலாற்றுப் பார்வை மிக விசாலமானதாகவும் துல்லியமானதாகவும் இருப்பதை இந்நூலில் காணமுடியும்.
வரலாற்றுப் பதிவுக்கு முற்பட்ட காலத்துத் தகவல்களைச் சோதித்து உண்மையானவற்றை அறிந்து கொள்வதற்கு உரைகல்லாகத் திருக்குர்ஆனையும் நபிமொழிகளையுமே ஆசிரியர் எடுத்துக் கொண்டுள்ளது இங்குக் குறிப்பிடத்தக்கது.
இந்நூலை தமிழில் மொழிபெயர்த்துள்ள மெளலவி நூ.அப்துல் ஹாதி பாகவி இந்த வழிமுறையை நல்ல யுக்தியுடன் கையாண்டிருக்கிறார். நீளமான வாக்கியங்கைளச் சிறு சிறு பத்திகளாப் பிரித்து எளிதில் விளங்கும் வகையில் அமைத்திருக்கிறார். இதனால் மொழி பெயர்க்கப்பட்ட ஒரு நூலை வாசிக்கும் போது பொதுவாக உணரப்படும் நடைத்தொய்வு இந்நூலில் பெரும்பாலும் உணரப்படவில்லை என்பது பாராட்டுக்குரியது.
இத்தகைய சிறப்பு மிகு ‘அல்பிதாயா வந்நிஹாயா’ என்ற மூல அரபு வரலாற்று ஆய்வு நூலின் ஒரு பகுதியான ‘கஸஸுல் அன்பியா’ எனும் பகுதியை மட்டும் ‘நபிமார்களின் வரலாறு’ என்ற பெயரில் மொழிபெயர்த்து ஆறு பாகங்களாக சென்னைத் திருவல்லிக்கேணி ஆயிஷா பதிப்பகம் வெளியிட்டிருக்கிறது. நபிமார்கள் வரலாறுகளை அறிய இதைவிட ஆதாரப்பூர்வமான நூல் கிடையாது. இதன் மூல அரபி நூலும் நமது அஞ்சுமன் அறிவகத்தில் இருக்கிறது. இவற்றை ஒரே இடத்தில் படித்து பயன்பெற அன்புடன் அழைக்கிறது
அஞ்சுமன் அறிவகம்
Comments
Comments are closed.