நூலகம் அறிவாலய நுழைவாயில்
நூல்கள் அறிவோம்
நூல் பெயர்: நூலகம் அறிவாலய நுழைவாயில்
ஆசிரியர் : கி. முத்து செழியன்
பதிப்பகம் : நியூ சென்சுரி புக் ஹவுஸ்
பிரிவு : GGA
நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் வெளியீடான நூலகம் – அறிவுலக நுழைவாயில் என்கின்ற இப்புத்தகம் எதிர்காலத்தில் அந்நிறுவனத்தின் அரிய பொக்கிஷங்களில் ஒன்றாகக் கருதப்படும் என்பதில் மாற்றுக்கருத்து ஏற்படாது. ஏனெனில் ஒரு நூலகம் தொடர்பான தற்கால தலைமுறைகளின் அறிதலும் புரிதலும் மகிழத்தக்க வகையில் இல்லை என்ற தமிழகச் சோகச் சூழல் நிலவி வருகின்ற நிலையில், இப்புத்தகம் அத்தகையோருக்கான அருங்கையேடாக விளங்கும் என்பதால்.
muthuchezhiyan book356 பக்கங்களைக் கொண்ட இந்த நூல் சர்வதேச அளவிலான நூலகங்களின் தோற்றம், பரிணாம வளர்ச்சி, மாறி வந்துகொண்டிருக்கின்ற தொழில்நுட்பம் என இத்துறை தொடர்பான அறிவுத் தேக்க நிலையைத் தடையின்றிக் கலைக்கின்றது, புது ரத்தம் பாய்ச்சுகிறது.
“ஆசிரியரைப் பற்றி” என்ற தலைப்போடு நூல் துவங்குகிறது. பேராசிரியர் முதுமுனைவர் கி.முத்துச்செழியன் Ph.D.,FNABS,FZSI,FPBS,FIEF(Canada) அவர்கள் இந்த நூலை வார்த்திருக்கிறார். அவரைப் பற்றிய அறிமுகத்திலேயே நூலின் செறிவும் செழு மையும் கண்முன்னும் மனதிற்குள்ளும் புலப்படத் தொடங்கி விடுகிறது. மனிதர் எத்தனை துறைகளில் அரும்பணியாற்றியிருக்கிறார், அதில் அழுத்தம் திருத்தமாகத் தடம் பதித்திருக்கிறார் என்பதை அறியும்போது மலைப்பின் உச்சியில் நாம். முன்னதாக “பட்டம் ஒரு தலைமுறைக் கவசம்” என்ற நூலை பேரா.கி.முத்துச்செழியன் எழுதியிருக்கிறார் என்ற தகவலும் இதில் உள்ளது. ஆனால் அவர் நூலகம் – அறிவுலக நுழைவாயில் என்ற இந்த நூலை பிரசவித்ததன் மூலமாக எதிர்காலத் தலைமுறைகளுக்கான “அறிவுக் கவசத்தை” வழங்கியிருக்கிறார் என்றே சொல்ல முடியும். நூலாசிரியரின் அறிமுக உரையானது, அடுத்தடுத்து இருக்கின்ற 25 தலைப்புகளுக்கு ஆவலோடு செல்லத் தூண்டுகின்ற வகையில் உற்சாகத்தோடு துவங்குகின்றது.
நூலகம் – ஒரு வரையறை என்ற முதல் அத்தியாயம் தொடங்கி, எட்டாவதாக இருக்கின்ற உலகின் பழைய நூலகங்கள் வரையிலான பக்கங்களில், உலக அளவிலான குறிப்பாக ஐரோப்பிய அமெரிக்க நூலகங்களின் வரலாறு, அவைகளின் வகைகள், அமைப்புமுறை, கட்டடங்களின் வடிவமைப்பு, நூலகச் சங்கங்கள், என ஆதிமுதல் அந்தம் வரையிலான தகவல்களை, இது குறித்து வேறு எங்கும் தேடித் தெரியத் தேவையில்லை என்ற அளவில் பதிவு செய்யப்பட்டுள்ளது. பிந்தைய பழங்காலம் என்று குறிப்பிடப்பட்டுள்ள கி.பி.330களில், நூலகங்கள் அரசு சார்பு கொண்டவை, ஆண்வம்ச சார்பு கொண்டவை, மதச்சார்பு கொண்டவை, தனியார் சார்பு கொண்டவை எனப் பிரிக்கப்பட்டு அமைக்கப்பட்டு இருந்தது என்ற தகவல் இருக்கின்றது. அப்படியானால் அந்தக் காலகட்டத்திற்கும் பல நூற்றாண்டுகளுக்கு முன்னமே “புத்தகத்தின் வீச்சினையும், அது எத்தகைய விளைவுகளை மக்கள் மத்தியில் ஏற்படுத்தும்” என்பதையும் அதிகார வர்க்கம் அறிந்துள்ளது என்பது நமக்குப் புரிகின்றது.
அன்வர்தா (Anawrahta) என்ற பர்மிய அரசர் நிறுவிய பிதாகா தைக் (Pitaka Taik) என்ற அரச நூலகம் குறித்து பிரமித்துப் போன இங்கிலாந்து தூதுவர் மைகேல் சைமெஸ், “தனுபே நதிக்கரையிலிருந்து சீனாவின் எல் லைப் பகுதிக்கு உட்பட்ட எந்த ஒரு நாட்டிலும் இங்குள்ளதைவிட அதிக எண்ணிக்கையில் நூல்கள் இருக்க முடியாது” என்று சிலாகித்துள்ளார். மறுமலர்ச்சிக் காலம், அறிவொளிக் கால நூலகங்கள் எனக் காலம் பிரித்து பல்வேறு நாடுகளில் நிறுவப்பட்ட நூலகங்களின் தன்மைகளையும், தாக்கங்களையும் பதிவு செய்திருக்கிறார் ஆசிரியர். குறிப்பாக சீனாவில் கி.பி.1561 இல், மிங் வம்ச அரசராகிய பன்க்வின் என்ற அரசரால் நிறுவப்பட்ட “தியான்பி சேம்பர்” என்ற நூலகம் நம்முடைய எல்லை நாட்டில், இந்தியாவிலிருந்து புத்தம் பரவி அதன் கலாசாரம் பண்பாடு வேரூன்றிய நாடொன்றில் இருந்ததும் அது பெரும் புகழும் பெற்றது என்பதும் அதனுடைய வேர்களை அறியத் தூண்டுகின்ற தகவலாக இருக்கின்றது. நூலகச் சேவையில் முன்னோடியாகவும், அத்துறை தொடர்பான பல மாற்றங்களையும் ஏற்படுத்தியவராகக் கருதப்படும் இத்தாலி நாட்டைச் சேர்ந்த சர் அன்டோனி பானிஜி, நூலகத்தின் பொருளாதாரம் பற்றி முதன் முதலாக “நூலகம் அமைப்போருக்கான ஆலோசனை” என்ற நூலை 1627 இல் எழுதிய பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த கேப்ரியல் நௌதே போன்றவர்கள் குறித்த விவரங்களை அடங்கிய இப்பகுதிகளில் “நூல்களை இரவல் வழங்குவது அன்பு காட்டுவதற்கான முக்கியமானதொரு வழியாகும்” என்ற கருத்துக்களை அக்கால நூலக அமைப்பு விரும்பிகள் வலியுறுத்தி வந்தார்கள் என்பதையும் ஆசிரியர் பதிவு செய்திருக்கிறார். உலக, இந்திய, தமிழக அளவில் சிறந்த நூலகங்களின் பெயர்ப் பட்டியலும் இப்பகுதியில் இடம்பெற்றுள்ளது.
இவ்வாறாக பல்வேறு குவியல் குவியலான தகவல் களஞ்சியங்களினூடாக பயணப்பட்டு வருகின்ற போது, ஒன்பதாம் அத்தியாயம் முதல் பதிமூன்றாம் அத்தியாயம் வரையில், இந்தியா உட்பட சில நாடுகளில் பயன்படுத்தப்படுகின்ற நூலக பகுப்பாய்வு முறைகளும், அத்தகைய பகுப்பாய்வுகளில் புழக்கத்தில் இருக்கின்ற தலைப்புகளும் விவரிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக சீன நூலகப் பகுப்பு முறை மற்றும் காங்கிரஸ் நூலகப் பகுப்பு முறைகள் முழுவதுமாக விளக்கப்பட்டுள்ளது. பொது நூலகம் பற்றிய விரிவான பார்வையும், அதன் சாதக பாதகங்களை ஆசிரியர் ஆராய்ச்சித் தன்மையோடு விளக்கியிருக்கிறார். அவ்வாறு நிறுவப்பட்ட நூலகங்களின் சேவைத் திறன், இந்தியாவின் நூலகச் சட்டத்தை முதன்முதலாக நிறைவேற்றிய மகாராஷ்டிர மாநிலம் கோலாப்பூர் பற்றிய குறிப்புகள் என நூலின் 158ஆம் பக்கம் வரை நூலகங்கள் குறித்து அறிந்திராத பற்பல வியப்பூட்டுகின்ற விவரங்கள் இடம்பெறுகின்றது.
நுால்கள் அறிவாேம்
அஞ்சுமன் அறிவகம்
அய்யம்பேட்டை، தஞ்சாவூர்
Comments
Comments are closed.