சுனனுந் நஸாயீ (பாகம் ஒன்று)
சுனனுந் நஸாயீ (பாகம் ஒன்று)
இது உலகப் புகழ்பெற்ற ஆறு நபிமொழித் தொகுப்பு நூல்களில் ஒன்று. இந்நூலாசிரியர் வியக்கத்தக்க நினைவாற்றலுடன் விழங்கிய இமாம் அஹ்மத் பின் ஷுஐப் அந்நஸாயீ (ரஹ்) ஆவார்கள். இவர்கள் கி.பி.830 ஆம் வருடம் பிறந்து கி.பி.915 (ஹிஜ்ரி 215 – 303) ஆம் வருடம் வருடம் வரை வாழ்ந்தார்கள்.
இவர்கள் நபிமொழிகளைத் திரட்ட ஹிஜாஸ், ஷாம், ஹர்ரான், மவ்ஸில், பக்தாத், கூஃபா, பஸ்ரா என்று பல நாடுகளுக்குப் பயணம் செய்திருக்கிறார்கள். இவர்கள் எழுபது மார்க்க அறிஞர்களிடம் பாடம் பயின்றிருக்கிறார்கள்.
முன்னணி நபித்தொகுப்புகளான புகாரி, முஸ்லிமுக்கு அடுத்து சுனனுந் நஸாயீ சிறப்புடையது என்று அறிஞர் பலர் பாராட்டியுள்ளனர். இந்நூல் புகாரி, முஸ்லிம், திர்மிதீ போன்று ஃபிக்ஹு என்னும் மார்க்கச் சட்டத்துறைக்கு மிகுந்த முக்கியத்துவம் கொடுத்துத் தொகுக்கப்பட்டுள்ளது.
இந்நூலைப் பற்றி அறிந்து கொள்ள வாசகர்களுக்காக கவிக்கோ அப்துர் ரஹ்மான் அவர்கள் இந்நூலுக்கு எழுதிய ஆய்வுரையிலிருந்து சில இங்கே தருகிறோம்:
நஸாயீ முதற் பாகத்தில் நாம் கவனத்தில் கொள்ள வேண்டிய பல விஷயங்கள் இருக்கி்ன்றன.
அங்கத் தூய்மை செய்யாமல் குர்ஆன் ஓதக் கூடாது என்று சிலர் கூறுகின்றனர். ஆனால் பெருமானார் (ஸல்) அவர்கள அங்கத் தூய்மை இல்லாமல் குர்ஆன் ஓதியதாக நபிமொழி (265) கூறுகிறது. அங்கத் தூய்மை இல்லாமல் குர்ஆன் ஓதக் கூடாது என்று குர்ஆனோ ஆதாரப்பூர்வமான நபிமொழியோ கூறவில்லை.
பெண்களுக்கு மாதவிடாய் ஏற்படும் காலத்தில் பெரும்பாலான மாதங்கள் அவர்ளை வீட்டிலிருந்து விலக்கி வைப்பார்கள். யூதர்கள் மாதவிடாய் ஏற்பட்ட பெண்களுடன் சேர்ந்து உண்ணவோ, பருகவோ மாட்டார்கள்; வீட்டிலும் சேர்த்துக் கொள்ள மாட்டார்கள்.
இது பற்றித் தோழர்கள் பெருமானார் (ஸல்) அவர்களிம் வினவினார்கள். அப்போது மாதவிடாய் பற்றி உங்களிடம் வினவுகின்றனர். அது ஓர் இடையூறு (2:222) என்ற வசனத்தை அல்லாஹ் அருளினான்.
பெருமானார் (ஸல்) அவர்கள் மாதவிடாய் ஏற்பட்ட பெண்களுடன் சேர்ந்து உண்ணுமாறும் பருகுமாறும் வீடுகளில் சேர்ந்துக்கொள்ளுமாறும், உடலுறவு தவிர மற்ற அனைத்தையும் செய்து கொள்ளுமாறும் கட்டளையிட்டார்கள். (286)
இது பெண்ணை இழிவாக நடத்தும் மதங்களிலிருந்து இஸ்லாம் வேறுபட்டு நிற்பதையும், மூட நம்பிக்கைகளை விலக்கிப் பிரச்சனைகளை அறிவுப்பூர்வமாக அணுகுவதையும் காட்டுகிறது. பெண்களை இழிவுபடுத்தும் மதங்களில் இருந்து கொண்டு இஸ்லாம் பெண்களை இழிவுபடுத்துகிறது என்று பேசும் மூடர்கள் இது பற்றிச் சிந்திப்பது நல்லது.
மற்ற இறைத்தூதர்களுக்கு அருளப்படாத ஐந்து சிறப்புகள் பெருமானார் (ஸல்) அவர்களுக்கு அருளப்பட்டன. (429)
1. பெருமானார் படையெடுத்து வருகிறார் என்றால் ஒரு மாதத் தொலைவில் உள்ள பகைவர்களுக்கும் அச்சம் ஏற்படும்.
2. பூமி முழுதும் அவர்களு்க்குத் தொழுமிடமாக ஆக்கப்பட்டது.
3. நீரிலா இடத்தில் தூய மண்ணால் தயம்மும் செய்து கொள்ள அனுமதி வழங்கப்பட்டது.
4. மறுமையில் தம் சமுதாய மக்களுக்காக இறைவனிடம் பரிந்துரை செய்யும் வாய்ப்பு வழங்கப்பட்டது.
5. இறைத்தூதர்கள் எல்லோரும் அவரவர் சமுதாயத்திற்காக மட்டுமே அனுப்பப்பட்டார்கள். ஆனால் பெருமானார் அனைத்துலகிற்கும் இறைத்தூதராக அனுப்பப்பட்டார்கள்.
பெருமானார் ஐவேளைத் தொழுகையை இறைவனிடம் பெற்றுவந்த வரலாற்றை நபிமொழி 444 விரிவாக விளக்குகிறது. முதலில் பர்ளு இரண்டிரண்டு ரக்அத்தாகவே கடமையாக்கப்பட்டது. பின்னரே நான்கு ரக்அத் ஆக்கப்பட்டது என்ற விவரத்தை மற்றொரு நபிமொழி (450) தெரிவிக்கிறது.
சில மதங்கள் பெண்களை வழிபாட்டுத் தலங்களில் அனுமதிப்பதில்லை. ஆனால் இஸ்லாம் அனுமதிக்கிறது. பெருமானார் (ஸல்) அவர்கள்,
உங்களுள் எவருடைய மனைவியும் பள்ளிவாசல் செல்ல அனுமதி கோரினால் அவரை தடுக்கக் கூடாது (699) என்று கூறியிருக்கிறார்கள்.
இஸ்லாம் உயிர் நேயத்தைக் கொள்கையாக உடையது. அஃறினணப் பிராணிகளையும் அன்போடு நடத்த வேண்டும் என்று கூறுகிறது. இதற்குச் சான்றாக 1465 ஆவது நபிமொழியைக் காட்டலாம்.
ஹிம்யர் இனத்துப் பெண்ணொருத்தி நல்லவள். ஆனாலும் அவள் நரகத்துக்கு அனுப்பப்பட்டாள். காரணம் அவள் ஒரு பூனையை வளர்த்து வந்தாள். அவள் அதைக் கட்டிப் போட்டு வைத்திருந்தாள். அதற்குத் தீனியும் தரவில்லை. அதை அவி்ழ்த்து விட்டிருந்தாலாவது அதுவாகவே ஏதாவது உணவைத் தேடி தின்றிருக்கும். அப்பூனை உணவில்லாததால் இறந்து போயிற்று. இதன் காரணமாக அவள் நரகவாசியானாள்.
இதுபோன்று எண்ணற்ற அற்புத்தகமான நபிமொழிகளை ஆதாரப்பூர்வமாக அறிந்து கொள்ள இது ஒரு மிகச் சிறந்த நூலாகும். இந்நூலைப் படித்து பயன்பெற இனிதே அழைக்கிறது.
அஞ்சுமன் அறிவகம்
ரயில்வே ஸ்டேஷன் ரோடு
அய்யம்பேட்டை, தஞ்சாவூர்
Comments
Comments are closed.