சுனனுந் நஸாயீ (பாகம் இரண்டு)
இந்நூலின் ஆசிரியர் இமாம் அஹ்மத் பின் ஷுஐப் அந்நஸாயீ (ரஹ்) அவர்களைப் பற்றிய குறிப்பையும், இந்நூலின் முக்கியத்துவம் மற்றும் சிறப்பைப் பற்றி நாம் முதல்பாகத்திலேயே குறிப்பிட்டிருந்தோம்.
இந்த இரண்டாம் பாகத்திற்கும் கவிக்கோ அவர்கள் எழுதியிருக்கும் ஆய்வுரையிலிருந்து சில தகவல்களை இங்கே தருகின்றோம்.
இஸ்லாமிய மார்க்க மூல நூல்களைத் தொடர்ந்து வெளியிட்டு வரும் ரஹ்மத் அறக்கட்டளை அந்தத் திட்டத்தின்படி சுனனுந் நஸாயீ முதற் பாகம் வெளிவந்துவிட்டது. இப்போது அதன் இரண்டாம் பாகம் வெளியிடப்பட்டிருக்கிறது. எல்லாப் புகழும் இறைவனுக்கே
இந்த இரண்டாம் பாகத்தில் மழை வேண்டிப் பிரார்த்தித்தல், அச்ச நேரத் தொழுகை, இரு பெருநாள் தொழுகை இரவுத் தொழுகையும் பகலில் தொழும் உபரித் தொழுகையும், இறுதிக்கடன்கள், ஆகிய தலைப்புகளில் நபிமொழிகள் திரட்டித் தரப்பட்டுள்ளன.
மலை பெய்யாமலும் கெடுக்கும், பெய்தும் கெடுக்கும். இறைத்தூதர் (ஸல்) அவர்கள் சில நேரங்களில் மழை வேண்டிப் பிரார்த்தனை புரிந்திருக்கிறார்கள். அவ்வாறு பிரார்த்தனை புரிந்து அதன் பலனாய் மழை பெய்யும் போது,
இறைவா இதைப் பயனுள்ள மழையாய் ஆக்குவாயாக (1506வது நபிமொழி) என்று பிரார்த்திப்பார்கள்.
பயனுள்ள மழை என்ற சொற்தொடர் பெருமானாரின் நுண்ணறிவைப் புலப்படுத்துகிறது.
அறியாமைக் கால அரபியர் நட்சத்திரங்களால் தான் மழை பெய்கிறது என்ற மூட நம்பிக்கை கொண்டிருந்தனர். எனவே இறைவன் பெருமானாருக்கு அறிவித்தான். “என்னால் தான் மழை பொழிந்து என்று என்னை நம்பி யார் என்னைப் போற்றுகின்றாரோ அவரே என்னை நம்பி நட்சத்திரத்தை மறுத்தவர் ஆவார். யார் இன்ன இன்ன நட்சத்திரத்தால் எங்களுக்கு மழை பொழிந்தது என்று கூறுகிறாரோ அவரே என்னை மறுத்து நட்சத்திரத்தை நம்பியவர் ஆவார். (1508)
இந்த நபிமொழி இஸ்லாம் ஒரு பகுத்தறிவு மார்க்கம் என்பதற்குச் சான்றாகும்.
இப்போது நாம் சிறு, சிறு காரணங்களுக்காகத் தொழுகையை விட்டு விடுகிறோ். ஆனால் பெருமானார் உயிருக்கு ஆபத்தான போர்க் களங்களில் கூடத் தொழுகையை விட்டதில்லை, (1526 ஆம் நபிமொழி)
இதிலிருந்து பெருமானாரின் பெருவெற்றிக்குக் காரணம் ஆயுதங்களல்ல, ஆண்டவைன தொழுதது என்பதை அறியலாம்.
ஒருமுறை இறைத்தூதர் (ஸல்) அவர்கள் தம் தோழர்களோடு அமர்ந்திருந்த பொழுது ஒரு பிரேதம் அவர்களைக் கடந்து சென்றது. இறைத்தூதர் எழுந்து நின்றார்கள். தோழர்கள் வியப்போடு, இறைத்தூதர் அவர்களே! இது யூதரின் பிரேதமாயிற்றே- என்று கூறினார்கள். அதற்கு இறைத்தூதர் கூறிய பதில் “இதுவும் ஒரு நஃப்ஸ் தானே” (1895)
நஃப்ஸ் என்பதற்குப் பல பொருள் இருப்பினும் இங்கே “ஆன்மா” என்ற பொருள் கொள்ள வேண்டும். மனிதர்கள் எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் அவர்கள் அனைவரும் ஒரே ஆன்மாவிலிருந்தே படைக்கப்பட்டார்கள் என்று குர்ஆன் கூறகிறது. இதிலிருந்து மத அடையாளங்கள் உடலுக்கே தவிர ஆன்மாவுக்கில்லை என்பது உணர்த்தப்படுகிறது. இது இறைத்தூதரின் சமய நல்லிணக்கப் பார்வையைக் காட்டுகிறது. முஸ்லிம்களிலேயே சிலரைக் “காபிர்” என்று ஃபத்வா கொடுத்து அவர்களோடு பகைமை பாராட்டுபவர்கள் சிந்திக்க வேண்டிய நபிமொழி இது.
சுனனுந் நஸாயீ இரண்டாம் பாகம் நல்ல, எளிய தமிழில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது. வேண்டிய இடங்களில் தேவையான அடிக்குறிப்பும் தரப்பட்டுள்ளது. இவ்வளவு சிறப்பு மிக்க புத்தகங்களை படித்து பயன்பெற இனிதே அழைக்கிறது,
அஞ்சுமன் அறிவகம்
ரயில்வே ஸ்டேஷன் ரோடு
அய்யம்பேட்டை, தஞ்சாவூர்
Comments
Comments are closed.