இஸ்லாமிய கலைக்களஞ்சியம் (பாகம்-1)
நூல் பெயர் : இஸ்லாமிய கலைக்களஞ்சியம் (பாகம்-1)
ஆசிரியர் : எம்.ஆர்.எம்.அப்துர் ரஹீம்
வெளியீடு : யுனிவர்ஸல் பப்ளிஷர்ஸ்
நூல் பிரிவு : IE-03 —-1392
நூல் அறிமுகம்
கலைக்களஞ்சியம் என்பது ஒரு துறை சார்ந்த அனைத்துத் தகவல்களையும் தரக்கூடிய ஓர் அரிய நூல்வகையாகும். இஸ்லாமிய கலைக்களஞ்சியம் என்ற இந்நூலில் இஸ்லாம் தொடர்பான எந்தத் தகவல்களையும் பெற்றுக் கொள்ள முடியும். பெறற்கரிய பொக்கிஷமாகத் திகழும் இந்நூலை படித்துப் பயன்பெற இனிதே அழைக்கிறது அஞ்சுமன் அறிவகம்.
இந்நூலின் முதல் பாகத்தில் ‘அ’ வரிசையில் உள்ள அனைத்துத் தகவல்களும் இடம்பெறுகின்றன.
வாசகர்கள் இந்நூலைப் பற்றி அறிந்து கொள்வதற்காக இந்நூலின் பதிப்புரையிலிருந்து சில தகவல்களை இங்கே தருகிறோம்.
இஸ்லாமியத் தமிழுலகிற்கு பன்னூல் ஆசிரியர் அப்துற்-றஹீம் அவர்கள் ஆக்கியளித்த அரும்பெரும் படைப்புகளுள் சிகரமாகத் திகழ்வது இந்த இஸ்லாமியக் கலைக்களஞ்சியம்!
இது ஓர் அறிவுப் பெட்டகம்; ஆராய்ச்சிக் கருவூலம்; அற்புத பொக்கிஷம்! ‘ஒரு பல்கலைக் கழகத்தில் ஆசிரியர் குழு செய்ய வேண்டிய ஒரு காரியத்தைத் தனிமனிதராகச் சாதித்திருக்கிறாரா!’ என்று அப்துற்-றஹீம் அவர்களைக் குறித்து அறிவுலம் இன்னும் ஆச்சரியப்பட்டுக் கொண்டிருக்கிறது.
உலகம் தோன்றிய காலந்தொட்டுத் தாம் வாழ்ந்த காலம் வரை இவ்வுலகில் இஸ்லாம் பதித்திருக்கும் சுவடுகளையும்,இஸ்லாத்தில் பதிந்த சுவடுகளையும் படம் பிடித்துக் காட்ட ஆசிரியர் அவர்கள் செய்திருக்கும் பெருமுயற்சியின் மேன்மையை,இந்நூலின் பக்கங்களைப் புரட்டும் ஒவ்வொருவரும் உணர்ந்து கொள்ள முடியும்.
ஆசிரியர் அவர்களே கூறுவது போல்,இந்நூல் மற்றக் கலைக்களஞ்சியங்களைப் போலல்லாமல் ஆரம்பம் முதல் முடிவு வரை தொடர்ச்சியாக வாசித்துக் கொண்டு போகுமாறு சுவாரசியம் ததும்ப எழுதப்பட்டுள்ளது என்பது, வாசிப்போர் ஒவ்வொருவரும் உணர்ந்த உண்மை.
இந்நூலின் ஒவ்வொரு பக்கத்தையும் ஊன்றிப் படித்துச் செல்வோர்க்கு இதில் உலக வரலாறே ஒளிந்து கொண்டிருப்பது தெரியவரும்;மானுட சரித்திரத்தில் இஸ்லாத்தின் மாபெரும் பங்கு என்னவென்பது புரியவரும்.
இக்கலைக் களஞ்சியம் முதற்பதிப்பாக வெளிவந்த போது, அறிவுத்தாகங் கொண்டவர்களெல்லாம் இதனை ஆர்வத்தோடு கரங்களில் ஏந்தி அகம் மகிழ்ந்தனர்; ஒரு புதையலைப் பெற்றுவிட்டதுபோல் பூரிப்படைந்தனர்.
பெறற்கரிய பொக்கிஷமாகத் திகழும் இந்நூலை படித்துப் பயன்பெற இனிதே அழைக்கிறது.
அஞ்சுமன் அறிவகம்
Comments
Comments are closed.