இந்தியா வரலாறும் அரசியலும்
நூல் பெயர்: இந்தியா வரலாறும் அரசியலும்
ஆசிரியர் : டி. ஞானய்யா
பதிப்பகம் : விடியல் பதிப்பகம்
பிரிவு : GHR – 02
95 வயதையும் தாண்டி வாழும் வரலாறாக வாழ்ந்து கொண்டு இருப்பவர் தோழர் டி.ஞானய்யா. இன்றும், இன்னும் எழுதிக்கொண்டும் இயங்கிக்கொண்டும் இருக்கிறார். நீண்ட ஆயுளுக்கு உடல்நலம் மட்டும் காரணம் அல்ல, சிந்தனைத் தெளிவும் முக்கியக் காரணமாக இருக்கும் என்பதற்கு உதாரணம் இவர். அவரது வன்மையான எழுத்தில் இந்தியாவின் வரலாறு சீரான பார்வையுடன் செதுக்கித் தரப்பட்டுள்ளது. புத்தகங்களில் இருந்து அல்லாமல், தன்னுடைய 74 ஆண்டுகால அரசியல் பயண அனுபவங்களின் மூலமாகப் பல்வேறு நிகழ்வுகளை அவர் விமர்சிப்பதால், இந்தப் புத்தகம் மாறுபட்டதாகவும் வேறுபட்டதாகவும் உள்ளது.
இந்தியா ஒரு தேசமாக உருவாகாத காலத்தில் இருந்து… வெள்ளை ஆட்சியாளர்களின் நிர்வாக வசதிக்காக இந்தியா உருவாக்கப்பட்ட குவிமையத்தில் தொடங்கி… வேற்றுமையில் ஒற்றுமை காணாமல் அனைத்து அடையாளங்களையும் சிதைத்து ஓர்மைத் தன்மைக்குள் ஒடுக்கத் திட்டமிடும் இந்தக் காலம் வரையிலான பல நூற்றாண்டு கால வரலாற்றை மீள் பார்வை செய்கிறார் டி.ஞானய்யா. இந்திய விடுதலையை வலியுறுத்திப் போராடியவர்களுக்கு மறைமுகமாக இருந்த கொள்கை நிலைப்பாடுகளும், இந்திய விடுதலையைப் பற்றிக் கவலைப்படாதவர்களின் உண்மையான நோக்கமும் வெளிச்சத்துக்கு வருகின்றன. தேசிய இயக்கமும் பொதுவுடமை இயக்கமும் பல்வேறு காலகட்டங்களில் எடுத்த அரசியல் நிலைப்பாடுகள் அலசி ஆராயப்பட்டுள்ளன. விடுதலைக்குப் பின்னும் இவர்கள் நடந்துகொண்ட நல்ல, கெட்ட முறைகளை தயவுதாட்சண்யம் இல்லாமல் விமர்சனம் செய்கிறார்.
டி.ஞானய்யா கம்யூனிஸ்ட் இயக்கத்துக்காக தனது வாழ்க்கையை அர்ப்பணித்தவர். அதற்காக அவர்களது செயல்களைக் கண்ணை மூடி ஆதரிக்கவில்லை. ”ஓர் அடிப்படைப் பிரச்னையாக ஒரு சமூக விடுதலைப் பிரச்னையாக கம்யூனிஸ்ட் இயக்கம் சாதி ஒழிப்புப் பிரச்னையை கையாளாமல்விட்டது வெளிப்படையாகத் தெரிகிறது. அவர்கள் இயக்கிய தொழிலாளர் விவசாயிகள் அமைப்புகளில் இந்தத் தேவையை வலியுறுத்தி உணர்வு ரீதியில் மாற்றிடத் தவறிவிட்டனர்’ என்று மிகச்சரியாகவே சொல்கிறார்.
காந்தி, நேரு, அம்பேத்கர், ராஜாஜி, ஜின்னா போன்றவர்களையும், அரசியல் ரீதியான அனைத்து இயக்கங்களையும் அடையாளம் காட்டும் டி.ஞானய்யா இறுதியாக, ”ஜோதிபாபுலே, அம்பேத்கர், பெரியார், சிங்காரவேலர் சிந்தனைகளை முறைப்படுத்தி ஒருங்கிணைத்து ஒரு சித்தாந்த முறைமையாக, நெறியாக மார்க்சிய கோட்பாடுகளின் மீது நின்று வடிவமைப்பது சமூக நீதிக்கான போராட்டத்தை இன்றைய புதிய அரசியல் சமூகப் பொருளாதாரச் சூழலுக்கேற்றவாறு எடுத்துச்செல்ல உதவும்’ என்று சொல்கிறார். ஒட்டுமொத்த இந்திய வரலாற்றையும் மறுபரிசீலனை செய்வதே இந்த நோக்கத்துக்காகத்தான் என்பதையும் புரிந்துகொள்ள முடிகிறது. இந்தப் புத்தகத்தை வாசிக்கும்போது இதுவரை புரியாமல் இருந்த பல நிகழ்வுகளுக்குத் தெளிவு பிறக்கிறது.
நுால்கள் அறிவாேம்
அஞ்சுமன் அறிவகம்
அய்யம்பேட்டை، தஞ்சாவூர்
Comments
Comments are closed.