ஃபிக்ஹுஸ் ஸுன்னா முதல் பாகம்

ஃபிக்ஹுஸ் ஸுன்னா முதல் பாகம்

நூல்கள் அறிவோம்

நூல் பெயர் : ஃபிக்ஹுஸ் ஸுன்னா முதல் பாகம் 
ஆசிரியர் : அஷ்ஷெய்க் ஸைய்யத் சாபிக்
பதிப்பகம் : இஸ்லாமிய நிறுவனம் டிரஸ்ட் 
நூல் பிரிவு : IF – 01

நூல் அறிமுகம்

‘இஸ்லாமியச் சட்டத் துறை என்றாலே அது மெத்தப்படித்த அறிஞர்களுக்கும் ஆய்வாளர்களுக்கும் உரியது; எளியோருக்கும் இஸ்லாமியச் சட்டங்களுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை’ எனும் ‘இரும்புச் சுவர்’ சூழல்தான் முஸ்லிம் சமூகத்தில் நிலவி வருகிறது. இதனால் ஏற்படும் விபரீதமான விளைவுகள் பற்றிச் சொல்லத் தொடங்கினால் ஏடு கொள்ளாது; எழுத்தாணி போதாது.

பரபரப்பான ஒரு நகரிலுள்ள பெரிய பள்ளிவாசலில் தலைமை இமாமாகப் பல ஆண்டுகளாய்ப் பணியாற்றிவரும் மார்க்க அறிஞர் ஒருவருடன் பேசிக் கொண்டிருந்தபோது, ‘இன்றைய இளைஞர்கள் – திருமணமான இளைஞர்கள் உட்பட- குளிப்பு எப்போது கடமையாகிறது போன்ற அடிப்படை மார்க்கச் சட்டங்களைக்கூட அறியாமல் இருக்கிறார்கள்; ஒப்பீட்டு அளவில் பதின்பருவப் பெண்பிள்ளைகள் பரவாயில்லை; பாட்டி, அம்மா, மூத்த சகோதரி என யாரேனும் ஒருவர் வளரிளம் பெண்களுக்கு சில அடிப்படை சுகாதாரங்கள் குறித்தச் சட்டங்களைச் சொல்லித் தந்துவிடுகிறார்கள். பையன்கள் நிலைமைதான் பரிதாபம்’ என்று வருத்தப்பட்டார்.

இந்த வருத்தத்துக்குக் காரணம் அடிப்படை மார்க்கச் சட்டங்களை நாம் பரவலாக்காததுதான். பெற்றோர்களுக்கே பல விஷயங்கள் தெரியாது எனும்போது, பிள்ளைகள் பற்றி என்ன சொல்ல? எந்த ஒரு சிறிய பிரச்னைக்கும் ‘போய் ஹஜ்ரத்துகிட்ட கேளு’ என்பதுதான் பதில். அந்தரங்க சுகாதாரச் சட்டங்கள் பற்றியெல்லாம் ஹஜ்ரத்திடம் எப்படிக் கேட்பது என்று கூச்சப்பட்டுக் கொண்டு அது பற்றிய அறியாமையிலேயே காலம் கடத்துபவர்கள்தான் அதிகம்.

இந்தச் சிக்கலுக்குத் தீர்வு காணவேண்டுமானால் எளிய பாமர மக்களிடம் இஸ்லாமியச் சட்டங்கள் சென்று சேர வேண்டும். அவர்களுக்குப் புரிகின்ற வகையில் சொல்லப்படவேண்டும். முஸ்லிம் சமூகத்தில் காணப்படும் சிந்தனைப்பிரிவுகள் குறித்தோ, ஒவ்வொரு சிந்தனைப் பிரிவின் சட்டவாக்கங்கள் பற்றிய வாதப் பிரதிவாதங்களோ இல்லாமல், அந்த எளிய வாசகனைக் கைப்-பிடித்து நேரடியாகக் குர்ஆனுக்கும் நபிவழிக்கும் அழைத்துச் சென்று ‘இதுதான் சட்டம், இதுதான் வழிமுறை’ என்று காண்பிக்கின்ற வகையில் இந்நூல் அமைந்திருக்கிறது.

“எந்த மத்ஹபு குறித்தும் ஆதரவோ எதிர்ப்போ இல்லாமல், நபிவழியை அடிப்படையாகக் கொண்டு சட்ட விளக்கங்களைத் தருதல் எனும் மகத்தான சாதனையை ஃபிக்ஹுஸ் ஸுன்னா நூல் சாதித்துக் காட்டியிருக்கிறது” எனும் டாக்டர் யூசுபுல் கர்ளாவி அவர்களின் ஒரு வரி போதும், இந்த நூலின் சிறப்பைச் சொல்ல!

ஃபிக்ஹுஸ் ஸுன்னாவின் முதலாம் பாகமான இப்புத்தகத்தில் பின்வரும் தலைப்புகள் உள்ளன.

பொருளடக்கம்

1. இஸ்லாத்தின் செய்தியும் குறிக்கோளும்
2. தூய்மை
3. நஜீஸ் (அசுத்தம்)
4. உளு
5. குளிப்பு
6. தயம்மம்
7. மாதவிடாய்
8. பிரசவ இரத்தம்

இந்த நூலில் சொல்லப்பட்டுள்ள வழிமுறைகளுக்கு ஏற்ப வாழ்ந்து, உடல் நலனையும் ஆன்ம நலனையும் பெற்றுப் பெருவாழ்வு வாழ இந்நூலைப் படித்து பயன்பெற அன்புடன் அழைக்கிறது.

அஞ்சுமன் அறிவகம்

/ Islamic Tamil, Tamil Fiqh

Share the Post

About the Author

Comments

Comments are closed.