வழுக்கலில் ஊன்றுகோல்

வழுக்கலில் ஊன்றுகோல்

நூல் பெயர் : வழுக்கலில் ஊன்றுகோல்
நூல் ஆசிரியர் : அப்துற்-றஹீம்
வெளியீடு : யூனிவர்ஸல் பப்ளிஷர்ஸ்
நூல் பிரிவு : GMA-110

இந்நூலைப்பற்றி ஒரு முக்கிய தகவல்

தனது வாழ்க்கையை வெறுத்து, தற்கொலை முடிவு வரை சென்றுவிட்ட ஒரு மனிதர் தன் வாழ்வை மீட்டி யெடுத்து தமிழ்த்துறைப் பேராசிரியராக வெற்றியடைந்த நிலையில் ஒரு விழாவில் சிறப்புரையாற்றும் போது, “நான் வாழ்க்கையை வெறுத்து தற்கொலை செய்து கொள்ளலாம் என்கிற நிலை வரை சென்று விட்டேன். அப்துற்-றஹீம் அவர்கள் எழுதிய வழுக்களில் ஊன்றுகோல் என்ற புத்தகம் கைக்குக் கிடைத்து. அவற்றைப் படித்தேன். என்வாழ்க்கையில் மிகப் பெரும் மாற்றத்தை உணர்ந்தேன். இப்போது உங்கள் முன் தமிழ்ப் பேராசிரியராக நின்கிறேன் என்றால் அதற்குக் காரணம் அந்த புத்தகத்தின் மூலம் கிடைத்த உந்துதல் தான் காரணம்” என்றார்.

வாசகர்கள் இப்புத்தகத்தைப் பற்றி மேலும் அறிந்து கொள்ள நூலாசிரியர் எழுதிய இந்நூலின் முன்னுரையை இங்கே தருகிறோம்:

மனிதனின் வாழ்வுப் பாதை மலர் வழியல்ல. வழுக்குமிடமும் சறுக்குமிடமுமுள்ள பயங்கர பாதை அது. நல்ல பாதையென்று நாம் ஓரிடத்தில் அடியெடுத்து வைப்போம். அதுவோ, உள்ளே சேறும் சகதியும் களியும் நிரம்பிய பூமியாக இருந்து நம்மைக் காலை வாரிவிட முனைந்து நிற்கும். அதில் நாம் அகப்பட்டு நமக்கே நாம் தீங்கிழைத்துக் கொள்ளாது நம்மைக் காத்துக் கொள்ள, நமக்கு உறுதுணையாக ஓர் ஊன்றுகோல் வேண்டும். இருப்பின், நாம் அடியெடுத்து வைப்பதற்கு முன்பே அதனை முன் அனுப்பிப் பாதை எவ்வாறிருக்கிறது என்பதை நாம் அதன் மூலம் அறிந்து கொள்ள ஏதுவாகும்.

அதுமட்டுமல்லாது நல்ல வழி என்று எண்ணிக் கொண்டு நாம் வழுக்கும் களிமண் பாையில் காலெடுத்து வைத்து விட்டால் கால் வழுக்கிக் கீழே வீழ்ந்து விடா வண்ணம் ஊன்றிக் கொள்வதற்கு மூன்றாவது காலாகவும் அது நமக்குப் பயன்படும். மேலும் அவ்வழுக்கல் நிலத்திலிருந்து நம்மைக் கீழே வீழ்ந்து விடா வண்ணம் நல்ல நிலத்திற்கு கொண்டு வர வழித் துணையாகவும் அது விளங்கும்.

ஆனால் ஆவ்வூன்றுகோல்களெல்லாம் மரத்தாலோ, இரும்பாலோ செய்யப்பட்டவையாகும். ஆனால் நான் தரும் இவ்வூன்றுகோலோ அறிவுத்திறன்களால் செய்யப்பட்டது.

மனிதன் இவ்வுலகில் தோன்றியது முதல் இதுகாறும் எத்தனை எத்தனையோ இடங்களில் எத்தனை எத்தனையோ தடவைகள் வழுக்கி விழுந்திருக்கிறான். அவற்றின் காரணமாக அவன் அடைந்த அனுபவங்கள், படித்த பாடங்கள் பல. அவை தன் வருங்காலத் தலைமுறையினருக்குப் பயன்பட வேண்டும் என்ற நோக்கத்துடனும், அவன் செய்த தவறுகளை நாமும் மீண்டும் மீண்டும் செய்து தவறுப் படுகுழியில் வீழ்ந்து நம் முன்னேற்றத்திற்குத் தடை விதித்துக் கொள்ளக் கூடாதென்ற நன்னோக்கத்துடனும் அவற்றை அவன் நமக்கு விட்டுச் சென்றுள்ளான். அவற்றை எல்லாம் தொகுத்து தான் ‘வழுக்கலில் ஊன்றுகோல்’ என்ற பெயருடன் இந்நூலை எழுதி நான் உனக்கு அளிக்கின்றேன். இது உன் வாழ்வுப் பாதைக்கு ஓர் ஊன்றுகோலாக அமையுமென்று நம்புகிறேன். இதனை ஊன்றி நீ வாழ்வுப் பாதையில் அடியெடுத்து வைப்பாயின், நல்வழி என்று நினைத்துப் படுகுழியில் வீழ்ந்து உன் வாழ்வைப் பாழ்படுத்திக் கொள்ளாது, நீ விரைவில் வெற்றி நகரை அடைய இது உறுதுணையாய் விளங்கும் என்பது உறுதி.

குறைவான பக்கங்களில் நிறைவான தகவல்களைப் பெற்றுத் தரும் அற்புதமான புத்தகமாகும். இவற்றைப் படித்துப் பயன்பெற இனிதே அழைக்கிறது.

அஞ்சுமன் அறிவகம்

/ General Tamil

Share the Post

About the Author

Comments

Comments are closed.