மேலே… உயரே… உச்சியிலே

மேலே… உயரே… உச்சியிலே

வாழ்வை வசப்படுத்துவது தன்னம்பிக்கை கொள்ளவைக்கும் வார்த்தைகள்தான். செயலைத் தூண்டும் சக்தி வார்த்தைகளுக்கு உண்டு. தன்னம்பிக்கை தரும் வார்த்தைகள் மனித வாழ்வுக்கு புதிய அர்த்தங்களைத் தருகின்றன. இந்தப் புத்தகத்தின் மூலம் மகத்தான வாழ்வுக்காக லட்சிய சிந்தனைகளை முன்வைத்திருக்கிறார் நூல் ஆசிரியர் வெ.இறையன்பு. வாழ்வின் பிரச்னைகளுக்குத் தீர்வு அவற்றை அணுகும் முறையில் இருக்கிறது. பிரச்னைகளை எவ்வாறு அணுகுவது? அவற்றை எவ்வாறு தீர்ப்பது? எல்லாப் பிரச்னைகளையும் ஒரே மாதிரியாக அணுக முடியாது. சிலவற்றைப் பிரித்துப் பார்க்க வேண்டும். சிலவற்றை ஒட்டுமொத்தமாகப் பார்க்க வேண்டும். இதில்தான் ஒருவருடைய நிபுணத்துவம் அடங்கி இருக்கிறது என்கிறார் நூல் ஆசிரியர். மாற்றி யோசிப்பது, வாழ்வைப் புரட்டிப்போடுகிறது. தோல்வியின் விளிம்பில் அல்லது நெருக்கடி நிலையில் ஒருவன் மாற்றி யோசித்தால் வாழ்வு வசப்படும் என்கிறார் நூல் ஆசிரியர். அதற்கான எடுத்துக் காட்டுக்களையும் அடுக்குகிறார். விரக்தியின் விளிம்புக்குச் சென்ற மனிதன் அதிலிருந்து மீள்வதற்கான வழிகள் என்னென்ன? நடைமுறை வாழ்க்கையில் இருந்தும், புராண-, இதிகாசங்களிலிருந்தும் உதாரணங்கள் இந்த நூலில் கொட்டிக்கிடக்கின்றன. எப்படிப்பட்ட பலசாலியாக இருந்தாலும் அவனை நம் மதியால் வென்றுவிடலாம். இது எப்படிச் சாத்தியமாகும் என்பதற்கு விடை இருக்கிறது. எவ்வளவு உழைத்தும் பயன் இல்லையே என்று ஏக்கப்படுபவரா நீங்கள்? வாழ்வில் உயர என்னதான் வழி என்று விடை தேடுபவரா நீங்கள்? உங்களுக்காகத்தான் இந்தப் புத்தகம். இது புத்தகம் மட்டுமல்ல, தன்னம்பிகை தரும் பொக்கிஷம்; வாழ்வை வளமாக்கும் அருமருந்து; உற்சாகத்துக்கான டானிக் என்று அடுக்கிக்கொண்டே போகலாம். தன்னம்பிக்கை தரும் பேச்சுகள், எழுத்துகளின் மூலமாக பல்லாயிரக் கணக்கானவர்களின் வாழ்வில் மாற்றத்தை கொண்டு வந்து, இளைஞர்களின் மனதில் தன்னம்பிக்கை விதையை விதைத்து, அவர்களை வெற்றிப்படி நோக்கிக் கைபிடித்து அழைத்துச் சென்றவர் வெ.இறையன்பு ஐ.ஏ.எஸ். அவரது வாழ்வியல் அனுபவங்களும், வாசிப்பு அனுபவங்களும் அடுத்தவரை உச்சிக்குக் கொண்டு சென்றிருக்கின்றன என்பது நிதர்சனமான உண்மை. இந்த உண்மையை இந்த புத்தகத்தில் நீங்கள் உணரலாம். படித்துப் பாருங்கள். முடியாது என்ற வார்த்தைக்கு நீங்களே முடிவு கட்டுவீர்கள்.

அஞ்சுமன் அறிவகம்

Share the Post

About the Author

Comments

Comments are closed.