நில் மனமே நில்

நில் மனமே நில்

இன்று மனிதன் விஞ்ஞானத்தில் எவ்வளவோ முன்னேறிவிட்டான். வாழ்க்கை வசதிகளுக்கும் குறைவில்லை. ஆனாலும்
நிம்மதிக்குத்தான் பஞ்சமாக இருக்கிறது. காரணம் தன்னிடம் உள்ள சக்தியை தகுந்த அளவில் முறையாகப் பயன்படுத்தத் தெரியாமல் போவது ஒரு காரணம். இதைவிட முக்கியமானது மனிதனிடம் இருக்கும் பேராசை. வாழ்க்கை என்பதும் ஒரு பயணம் மாதிரித்தான். உங்கள் வருமானம் எவ்வளவு என்பது முக்கியம் அல்ல. அதை நீங்கள் எப்படி செலவு செய்கிறீர்கள் என்பது தான் முக்கியம். வளமாக வாழ்வதில் இரண்டு விதம் இருக்கிறது. உங்கள் தேவைக்குத்தக்க வருமானத்தைக் கூட்டிக் கொள்வது ஒரு முறை. வருமானத்திற்குத்தக்க வாழ்க்கையை அமைத்துக் கொள்வது இன்னொருமுறை. இந்த இரண்டுவகையிலும் உங்கள் வாழ்க்கை கட்டுப்படாத போதுதான் கஷ்டம் எட்டிப் பார்க்கிறது. நீங்கள் இந்த உலகத்தை எப்படிப் பார்க்கிறீர்கள் என்பதை வைத்துதான் உங்கள் வாழ்க்கையும் அமையும். வறுமையில் வாழ்க்கையை ஓட்டிக்கொண்டிருந்த போது பாரதி பாடினான், எத்தனை கோடி இன்பம் வைத்தாய் இறைவா என்று. அவன் இன்பத்தில் திளைத்தான். அதனால்தான் சாதாரண மனிதனாக வாழ்ந்துமடிந்த பாரதியை நாம் பகாகவி என்று போற்றுகிறோம். உண்மையில் பாரதி உலக இன்பங்களை அந்த அளவுக்குக் கொள்ளை கொள்ளையாக அனுபவித்திருக்கிறான். இந்த தன்னம்பிக்கையை நீங்கள் கைக்கொண்டால் வாழ்க்கையில் புதிய வாசல் திறப்பதைக் காணலாம். இந்த புதிய வாசலில் நீங்கள் நுழைந்து பாருங்கள். உங்கள் வாழ்க்கை ஒளிமயமாக மாறிவிடும் என்பதை உறுதியாக என்னால் சொல்ல முடியும்.

அஞ்சுமன் அறிவகம்

Share the Post

About the Author

Comments

Comments are closed.