நான் புரிந்து கொண்ட நபிகள் நாயகம்

நான் புரிந்து கொண்ட நபிகள் நாயகம்

நூல்கள் அறிவோம்

நூல் பெயர் : நான் புரிந்து கொண்ட நபிகள் நாயகம்
தொகுப்பு : அ.மார்க்ஸ்
நூல் பிரிவு : IHR-5199

நூல் அறிமுகம்

நூல் ஆசிரியர் அவர்களின் முன்னுரையிலிருந்து…

இந்நூலை ஒரு கட்டுரைத் தொடராக எழுதத் தொடங்கும் போது அது அப்படியாக வடிவெடுக்கும் என நான் நினைக்கவில்லை. கட்டுரைத் தொடருக்கு நான் இட்ட பெயர் “நான் புரிந்து கொண்ட நபிகளும் இஸ்லாமும்”. ஆனால் இக்கட்டுரைகள் நூல் வடிவம் பெறும் பொழுது இதற்கு நான் புரிந்து கொண்ட நபிகள் நாயகம் என்பதைச் சற்றே சுருக்கிக் கொண்டேன்.

நூலினூடே குறிப்பிட்டிருப்பது போல இது நபிகளின் வாழ்க்கை வரலாறு அல்ல. நான் புரிந்து கொண்ட வகையில், நான் வியக்கும் வகையில் இங்கே நபிகளை அறிமுகம் செய்துள்ளேன்.

வாழ்க்கை வரலாறாக எழுதும் நோக்கமில்லாததால் சில வரலாற்றுச் சம்பவங்கள் முன் பின்னாகவும் அமைந்துள்ளன. எனினும் நூலின் பிற்பகுதி கிட்டத்தட்ட புலப்பெயர்வுக்குப் பிந்திய நபிகளின் வரலாறாகவே அமைந்துள்ளது.

இஸ்லாத்தின் சில நுணுக்கமான இறையியற் கோட்பாடுகள் நபிகளின் வாழ்வினூடாகவே வெளிப்படுவதால் புலப்பெயர்வுக்குப் பிந்திய வரலாற்றைக் கிட்டத்தட்ட முழுமையாகவே சொல்ல வேண்டியதாயிற்று.

இரண்டு அம்சங்கள் இங்கே குறிப்பிட வேண்டியவை. பிற மதங்களைப் போல இஸ்லாம் தன்னை ஏற்றுக் கொண்டவர்களுக்கு மரணத்திற்குப் பிந்திய ஒரு வாழ்வை மட்டுமே இலக்காக வைத்து இயங்கும் மதமன்று. ஒரு மத நிறுவனத்தை மட்டுமின்றி இவ்வுலகிலேயே நிறைவேற்றத் தக்க ஒரு சமூகத் திட்டத்தையும் முன் வைத்து இயங்குவதால் அது மிகுந்த செயலாக்கத்துடன் வரலாற்றில் தலையிடுகிறது. அதுபோலவே நபிகள் ஒரு வெறும் இறைத்தூதர் மட்டுமன்று, அவர் சமகால வரலாற்றில் தலையிட்ட ஒரு வரலாற்று நாயகரும் கூட. வாளெடுத்துப் போராடியவர். வாழ்நாளில் வென்று காட்டியவர்.

அவரது அன்றாட வாழ்க்கை, உரையாடல்கள், வெற்றிகள், தோல்விகள், மாண்புகள், பலவீனங்கள் அனைத்தும் ஆவணப்படுத்தப்பட்டுள்ளன. நம்பத் தகுந்த எல்லோரும் ஏற்றுக் கொண்ட வரலாற்று ஆவணங்களாக அவை உள்ளன.

இறைத்தூதர் முஹம்மதின் வாழ்வை அறிய அறிய அவரின் மானுடத் தன்மையில் நான் என் உளம் இழந்தேன். அவரது ஆளுமையில் கரைந்து போனேன்.

இந்த அளவிற்கு அ.மார்க்ஸ் அவர்கள் நபிகள் நாயகம் அவர்களை புரிந்து கொண்டு எழுதியுள்ள இந்நூலைப் படித்து பயன்பெற இனிதே அழைக்கிறது.

அஞ்சுமன் அறிவகம் 

Share the Post

About the Author

Comments

Comments are closed.