இறைத்தூதர் முஹம்மத் (ஸல்)
நூல் பெயர் : இறைத்தூதர் முஹம்மத்
மூல நூலாசிரியர் : எம்.ஆர்.எம்.அப்துர் ரஹீம்
மூல நூல் மொழி : ஆங்கிலம்
தமிழாக்கம் : சாத்தான்குளம் அப்துல் ஜப்பார்
வெளியீடு : யுனிவர்ஸல் பப்ளிஷர்ஸ்
நூல் பிரிவு : IHR – 01 1301
நூல் அறிமுகம்
பெருமானார் (ஸல்) அவர்கள் பற்றிய இலக்கிய ஆக்கங்கள் பல மொழிகளிலும் நிறையக் காணக் கிடைக்கின்றன. அவைகளில் சில இந்த மகத்தான மனிதரின் வாழ்வியல் சம்பவங்களை ஆதாரமாக்கியும், இன்னும் சில அவரின் தூதுத்துவத்தையும் அதன் விளைவான விழிப்பூட்டும் பிராச்சாரம் பற்றியும், வேறு சில அவர் நிகழ்த்திய அற்புதங்களால் அன்றாட வாழ்வில் ஏற்பட்ட தாக்கங்கள் குறித்தும் எழுதப்பட்டுள்ளன. ஆனால் இந்த எல்லா அம்சங்களையும் உள்ளடக்கிய நூல்கள் விரல் விட்டு எண்ணக்கூடிய அளவிலேதான் உள்ளன. அந்த அரிய நூல்களில் ஒன்றாக இந்நூல் அமைந்திருப்பது சிறப்பானதாகும்.
இஸ்லாம் பற்றியும் பெருமானார்(ஸல்) அவர்கள் பற்றியும் தகவல்களை அள்ளித்தரும் அறிவுப்பெட்டகமாய் இந்நூல் அமைந்திருப்பதால் சர்வ சமய ஆராய்ச்சியில் ஈடுபடும் மாணவர்களுக்கும் ஆய்வாளர்களுக்கும் இது பெரிதும் பயன்படும் என்பதில் ஐயமில்லை.
அரபி மற்றும் உருது மொழிகளில் குவிந்து கிடக்கும் பல அரிய தகவல்களைத் திரட்டிப் பெருமானாரின் வாழ்க்கைச் சரிதத்தை வடிவமைத்திருக்கிறார் இந்நூலாசிரியர். கண் துஞ்சாது, மெய் வருத்தம் பாராது உழைத்திருக்கிறார் என்பதற்கு விளக்கக் குறிப்புகளில் அவர் அள்ளிக் குவித்திருக்கும் தகவல்களே சான்று.
இந்நூலாசிரியர் எம்.ஆர்.எம். அப்துற்-றஹீம் அவர்கள் இராமநாதபுரம் மாவட்டம் தொண்டியில் மு.றா.மு.முகம்மது காசீம்-கதீஜா பீவி தம்பதிகளுக்கு 27.4.1922இல் பிறந்தவர். தொண்டியில் ஆரம்பக்கல்வியையும் திருக்குரு்ஆனையும் கற்றார். சென்னையில் இளங்கலைப் பட்டம் பெற்ற இவர் தனது 21 ஆது வயதிலேயே அரபியாவின் அதிபதி என்ற நூலை எழுதினார். இவர் எழுதிய ஐம்பதுக்கும் மேற்பட்ட தன்னம்பிக்கை நூல்கள் அறுபது வருடங்களைக் கடந்து இன்றும் பல்லாயிரக்கணக்கான வாசகர்கள் வாழ்வில் உயர வழிகாட்டிக் கொண்டிருக்கின்றன.
நபிமார்கள் வரலாறு, வலிமார்கள் வரலாறு, முஸ்லிம் தமிழ்ப் புலவர்கள், ஆகிய அற்புதமான நூல்களோடு அல்ஹதீஸ் அகர வரிசைத் தொகுப்பு, இஸ்லாமியக் கலைக்களஞ்சியம் ஆகிய மகத்தான படைப்புகளை அளித்த பன்னூலாசிரியர் தம் புகழ் மகுடத்தில் சூட்டிக் கொண்ட மற்றாெரு மாணிக்கம் தான் ஆங்கிலத்தில் இவர் எழுதிய ‘Mohammad The Prophet’ என்ற நூல். இதன் தமிழாக்கம் தான் ‘இறைத்தூதர் முஹம்மத் (ஸல்)’ என்ற இந்நூல்.
முஹம்மது நபியவர்களது வாழ்க்கை வரலாற்றை முழுமையாக அறிந்து கொள்ள விரும்புபவர்களுக்கு இந்நூல் மிகச் சிறந்த புத்தகமாக திகழ்கிறது. அரிய இந்நூலை தமிழில் வாசித்து பயன்பெற அன்புடன் அழைக்கிறது
அஞ்சுமன் அறிவகம்
Comments
Comments are closed.